ஹிந்து மற்றும் ஜெயின் பிரிவினர்கள் வருடத்தில் உள்ள நான்கு புனித
நாள்களில் ஒன்றாக அட்சய திரிதியைக் கருதுகிறார்கள். இந்த தினம் விஷ்ணுவின்
ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த தினத்தைக் குறிக்கிறது.
மேலும் இந்த தினத்தில்தான் வேத வியாசரும், விநாயகரும் சேர்ந்து இதிகாச
புராணமான மகாபாரதத்தை எழுத ஆரம்பித்தனர் என்றும் சொல்லப்படுகிறது. “அட்சய”
என்பதற்கு சமஸ்கிருத மொழியில் என்றும் குறைவில்லாத என்று ஒரு பொருள்
இருக்கிறது. இந்த நாள் ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும்
தரும். இந்த நாள் நாளடைவில் ஒருவர் புதிதாக தொழில் தொடங்குவது, வீடு
வாங்குவது, மொபைல் போன்
வாங்குவது என்று எந்த ஒரு செயல் செய்யவும் மிகவும் உகந்த நாள் என்றும்
சொல்லப்படுகிறது. அட்சய திரிதியை மே மாதம் 2-ம் தேதி, அதாவது வரும்
வெள்ளிக்கிழமை இந்த ஆண்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு
குந்துமணி தங்கம் அதாவது குறைந்த பட்சமாக அரை கிராம் தங்கம் வாங்கினால்
கூட, இனி வரும் காலங்களில் நம்மால் நிறைய வாங்க முடியும் என்பது ஒரு
நம்பிக்கை.
வியாபார உத்தி
சொல்லப்போனால் 2000-ம் ஆண்டின் ஆரம்பத்தில்தான் அட்சய திரிதியை பற்றி
பரவலாக பேச்சு ஆரம்பித்தது. அதாவது கடந்த 10 முதல் 15 வருடங்களாகத்தான் அதி
விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர் யாரும் இதைப்பற்றி
பேசியதில்லை. இது நகை வியாபாரிகளின் ஒரு வகையான வியாபார யுக்தி என்றே
சொல்லலாம்.
நம் வீட்டு பெண்களுக்கும் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இது ஒரு நகை வாங்குவதற்குரிய சந்தர்ப்பமாகவே கருதுகிறார்கள்.
ரூ. 1,940-க்கு ஒரு கிராம் தங்கம்
கடந்த சில தினங்களாக வரும் ஒரு விளம்பரம் சென்னை நகரில் உள்ள எல்லோர்
கண்ணையும் உறுத்துகிறது. நீங்கள் ரூபாய் 1,940-க்கு ஒரு கிராம் தங்கம்
வாங்கிக் கொள்ளலாம். குறைந்தது 10 கிராம் அதாவது 20,000 ரூபாய் செலுத்த
வேண்டும். பிறகு 10,000 ரூபாய் அத்துடன் சேர்த்தும் வாங்கலாம். அதாவது 20,
30, 40 ஆயிரம். ஆனால் அது 5 ஆண்டுகளுக்குப் பின்பே தரப்படும், நடுவில்
எக்காரணம் கொண்டும் திருப்பித்தர இயலாது. தங்கம் வாங்குபவர்கள் எல்லோருடைய
எண்ணமும் இன்று விற்கிற ஒரு கிராம் தங்கம்
2,800 ரூபாய், இன்னும் 5 வருடத்தில் குறைந்தது 5000 ஆகிவிடும் என்பதே. ஒரு
பொருள் தற்போது விற்கும் விலையைவிட 30% டிஸ்கௌன்டில் தருகிறார்கள்
என்றால், வரும் 5 வருடங்களில் தங்கம் விலை ஏறுவதற்கான வாய்ப்புகள்
மிகக்குறைவு என்பதை நாம் உணரவேண்டும். ஆங்கிலத்தில் கூறுவார்கள் THERE IS
NO FREE LUNCH IN THE BUSINESS என்று.
10 கிராமுக்கு 14.4 கிராம்
மற்றொரு ஆஃபர் (OFFER), இன்று நாம் 10 கிராம் தங்கம் கொடுத்தால், 5 வருடம்
கழித்து 14.4 கிராம் கொடுக்கிறார்கள். இன்று நிறைய பேர் தன்னிடத்தில் உள்ள
தங்கத்தில் 20% மட்டுமே அன்றாட வாழ்வில் உபயோகிக்கிறார்கள், 80% தங்கத்தை
லாக்கரில் வைக்கிறார்கள். அப்படி வைத்து லாக்கருக்கு பணம் கட்டுவதைவிட,
இவர்களிடம் கொடுத்தால், 44% அதிக தங்கம், தங்கம் பாதுகாப்பாக உள்ளது,
லாக்கர் செலவும் இல்லை?! சற்று சிந்திக்க வேண்டிய விஷயம்!
தங்கத்தை வைத்து அணிகலன் செய்யும்போது 13 முதல் 27% வரை சேதாரமும்,
குறைந்தது 2% செய்கூலியும் அந்த தங்கத் தின்மேல் விழுகிறது. நாம் சராசரியாக
20% அதிகம் பணம் செலுத்தினால்தான், நாம் வாங்கும் தங்கத்தை அணிந்து
கொள்ளமுடியும். மேலும் அடிக்கடி விதவிதமான டிசைன் அறிமுகப்படுத்துவதால்
பழைய டிசைன் நகைகளை வைத்து புதிதாக மாற்ற வேண்டும் என்ற கட்டயாம்.
அப்படி மாற்றும் போது உபயோகத்தில் கொஞ்சம் தங்கம் தேய்ந்து விடும்.
மீண்டும் 20% அன்றைய தங்கத்தின் மதிப்பைவிட கூடுதலாகக் கொடுத்தாலே நம்மால்
புதியது வாங்க முடியும். ஒவ்வொரு முறை நகையின் டிசைன் மாற்றும் போதும் நாம்
ஏறக்குறைய தங்கத்தின் அன்றைய விலை யை விட 20% அதிகமாகச் செலவிடவேண்டும்
என்பதை மனத்தில் கொள்ளவேண்டும்.
இந்த விளம்பரத்தில் நாம் என்ன கவனிக்க வேண்டும் என்று சொல்கிறேன்! அது உங்களுக்கு தேவையா இல்லையா என்பதை நீங்கள் முடிவெடுக்கலாம்.
மிகவும் பாதுகாப்பான முதலீடான, 5 வருட வங்கி டெபாசிட் நமக்கு 8.5% வட்டி
தருகிறது. அதற்கு வருமானவரி கிடையாது, அதில் முதலீடு செய்தால் வருமானவரி
விலக்கு பிரிவு 80Cல் அதற்கான பயனைப் பெற முடியும். அதாவது 19,400 ரூபாய்
முதலீடு செய்தால் 5 வருட முடிவில் 29,171 கிடைக்கிறது. இன்று விற்கிற ஒரு
கிராம் தங்கமான 2800 ரூபாய் இன்னும் 5 வருடம் கழித்தும் 2,917க்கு
கிடைக்கிறது. மேலும் அடுத்த 5 வருடத்தில் கண்டிப்பாக தங்கம் விலை உயராமல்
இருக்காது என்று நினைத்தால், வேறு என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது என்று
பார்க்கலாம்.
உதாரணமாக, இன்னும் 5 வருடத்தில் தங்கம் குறைந்தது 4,000 முதல் 5,000 வரை
கண்டிப்பாகச் செல்லும் என்று நீங்கள் கருதினால், நீங்கள் செய்யக் கூடிய
முதலீடு 15.57%, முதல் 20.85% வரை கூட்டு வட்டி ஈட்ட வேண்டும். அது
சாத்தியமா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு மேலும்
ஒரு தகவல் தருகிறேன் அது உங்களுக்குப்பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவில் மிகப் பெரிய தங்க கடன் நிறுவனங்களான முத்தூட் மற்றும்
மணப்புரம் NCD என்று சொல்லக் கூடிய முழுவதும் மாற்ற இயலாத கடன் பத்திரங்கள்
(நான் கன்வர்டிபிள் டிபெஞ்சர்) இதற்கு பாதுகாப்பு தருகிறார்கள். அவர்கள்
கொடுக்கூடிய வட்டி12%, 5 வருடத்திற்கு. அது அந்த அளவிற்கு பாதுகாப்பு இல்லை
என்று பலர் அதை வாங்குவதில்லை. ஆனால் மேலே சொன்ன திட்டத்தில், இவர்கள்
நாம் கொடுத்ததற்கு ஒரு ரசீது மட்டும் தருகிறார்கள், பாதுகாப்பிற்கென்று
எதுவும் கிடையாது. அவர்களிடம் கேட்டால் ரிஸ்க் எங்களுக்குத்தான் உங்களுக்கு
எந்தவிதமான ரிஸ்கும் கிடையாது என்ற பதில் வருகிறது!
சாராம்சம்
அட்சய திரிதியை நாள் மேலே சொல்லப்பட்ட காரணங்களைப் பார்க்கும்போது ஒரு நல்ல
நாள் என்று புரிகிறது. அத்தகைய நாளில் எந்த ஒரு செயலை செய்வதும் உகந்தது.
இதற்கும் தங்கம் வாங்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே சமயம்
நம்மிடம் பணம் இருந்தால் வாங்குவது தப்பில்லை. நாம் புதிய ஆட்சியை
எதிர்நோக்கி உள்ளோம், நாம் எல்லோரும் விரும்பும் ஆட்சி வருகிறபோது நம்முடைய
ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக உயர்ந்து காணப்படவே வாய்ப்புக்கள்
அதிகம்.
அவ்வாறு நடந்தால் தங்கம் விலை மேலே அதிகம் செல்வதற்கான காரணிகள் குறைவு.
எந்த ஒரு செயலையும் உணர்வு பூர்வமாக அணுகாமல் அறிவு பூர்வமாக நெருங்கினால்
நம்மால் ஒரு சிறந்த வாழ்வை மேற்கொள்ள முடியும் என்று சொன்னால் மிகையாகாது
1 comment:
Nice da
Post a Comment