உங்களின் மேலான கருத்துக்களையும் ஐயங்களையும் கேள்விகளையும் கீழேயுள்ள மின்அஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். நன்றி.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com

Please contact the below E-Mail ID for your suggestions, questions, and doubts. Thank you.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com


Thursday, October 17, 2019

இந்தியாவில் தமிழ்ப் பெண்ணின் பெயர் பொறிக்கப்பட்ட முதல் தங்கக் கட்டி

கீழடியை போன்றே வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஊர் தேனூர். இலக்கியக் குறிப்பிலும் அவ்வூர் உள்ளது. முதலாம் இராஜராஜ சோழன் கல்வெட்டும், சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும் சங்க இலக்கியமும் இந்த ஊரின் சிறப்பைப் பதிவு செய்கின்றன என இலக்கிய, தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், அறிஞர்கள் யாரும் ஆய்வு நடத்தாமல், தானாகவே வெளிவந்த சுயம்புவான கண்டுபிடிப்பு ஒன்று உண்டு.
தேனூரில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த ஒரு கனமழையில், அவ்வூரின் மத்தியில் ஒய்யாரமாக நின்ற ஓர் ஆலமரம் முற்றாகச் சரிந்தது. ஒரு மரம் சரிந்தால் ஊரே கூடி நின்று பார்ப்பது வழக்கம். அப்படியே ஊர் கூடி கண்டுகழித்து ஓய்ந்தது ஐந்தாறு சிறுவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். 
அதிலொரு சிறுவன் எதையோ கூர்ந்து கவனித்தான் அந்த ஆலமர வேர் இடுக்கில் மண்ணோடு மண்ணாக ஒரு சிறிய மண் கலசமிருந்தது. அதை அவன் எடுத்தான் கலசம் முழுக்க மண்ணால் நிரம்பியிருந்தது. அந்த கலசத்தை இரண்டு மூன்று சிறுவர்கள் உருட்டி விளையாடினர். ஒரு கட்டத்தில் அது இரண்டாக பிளந்தது. அதனுள்ளிருந்த மண் இலகுவாகி உள்ளேயிருந்த தங்கக்கட்டிகளும் சில ஆபரணங்களும் மின்னியது. விஷயம் ஊர் பெரியவர்களுக்கு கசிந்தது. யார் எவரெல்லாமோ அந்த கலசத்தை கைப்பற்றினார்கள். அந்த ஊரே கூடி சரிந்த ஆலமரத்தை சிதில் சிதிலாக பிரித்து மேய்ந்துவிட்டார்கள்.
விஷயம் காவல்துறையினரின் காதுகளுக்கு எட்டியது அன்றிரவே அவ்வூரே காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அந்த கிராம மக்களிடமிருந்து 7 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்தார்கள்.
கலயத்திற்குள் இருந்தது என்னென்ன ?
கலயத்திற்குள், 750 கிராம் எடையுள்ள, ஏழு தங்கக்கட்டிகள், 21 உத்திராட்ச மணிகள், மணிகளை இணைக்கும் 32 பொட்டுகள், 5.3 கிராம் எடையுள்ள டாலர் இருந்தன.
தகவல் அறிந்த அமர்நாத் அகழாய்வுக்குழு காவல் நிலையத்தில் போராடி பெற்று அதை கைப்பற்றினர். பார்த்த அவர்களுக்கே வியப்பு தாளவில்லை. காரணம் அந்த தங்கக்கட்டிகளில் அதே தமிழி எழுத்தில் கோதை என்று பதிக்கப்பட்டிருந்தது.
அவை, மதுரை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. கலெக்டர் அறிவுறுத்தலின் படி, தங்கக் கட்டிகளை ஆய்வு செய்த, அரசு மியூசிய காப்பாட்சியர் கூறுகையில், 'ஏழு தங்கக் கட்டிகளிலும், தமிழ் பிராமி எழுத்து வடிவில், 'போகுல் குன்றக் கோதை' என, எழுதப்பட்டிருந்தது. இவை, 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்து. தற்போது, போகுல் என்ற வார்த்தை வழக்கொழிந்திருக்கலாம். குன்றம் என்பது, மலையைக் குறிக்கும்' என்றார். 
புதையல், அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு அதிகாரி முதல், பொதுமக்கள் வரை எல்லோரும் பெரும் புதையல் என அந்தத் தங்கக் கட்டியை நினைத்தனர். ஆனால் விலைமதிப்பில்லா புதையல் அந்தத் தங்கக் கட்டியில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் தான்(படத்தில் பார்க்க).

ஏழு தங்கக்கட்டிகளிலும் ''தமிழி'' எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஏழிலும் ஒரு பெண்ணின் பெயரே இடம்பெற்றிருந்தது. அந்தப் பெயர் 'கோதை’. அந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட விதத்தை வைத்து, இது கி.மு 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தொல்பொருள் துறை மதிப்பிட்டுள்ளது. இதில் அதிசயம் என்ன தெரியுமா? எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்கக்கட்டி, இந்தியாவில் முதன்முதலில் இங்குதான் கிடைத்துள்ளது.
2,100 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தால் செய்யப்பட்ட தெய்வச்சிலைகள் கூட இதுவரை கிடைக்கவில்லை. எந்தத் தெய்வத்தின் பெயரும் தங்கத்தில் எழுதி, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
உருவ வழிபாடு தொடங்காத காலம் அது. எனவே சிலைகளுக்கோ அல்லது அதுசார்ந்த பெயர்களுக்கோ வாய்ப்பு இல்லை. ஆனால், அன்பும் காதலும் அப்படி அல்ல. மனிதனின் ஆதி அணுத் துகளில் இருந்து தொடங்கியது. காலமானிகளால் அளவிட்டுவிட முடியாத உணர்வுகளின் பரிணாமம். அதைப் போய் தனியாகக் கண்டுபிடிக்கத் தேவை இல்லை, ஏனென்றால், நாமே அதன் கண்டுபிடிப்புதான். 
அதனால்தான் தெய்வத்தின் பெயரோ, அல்லது மன்னனின் பெயரோகூட தங்கத்தில் எழுதப்படாத காலத்தில், ஆன்மிகமும் அதிகாரமும் எட்ட முடியாத எல்லையை, அன்பினால் தோய்ந்த மனிதச் செயலால் எட்டித்தொட முடிந்துள்ளது, ஒரு மனுஷிக்கு அவளை நேசித்த மற்றொருவரால் தரப்பட்ட, அல்லது அவளது பெயரை அவளே விரும்பி எழுதிவைத்துக்கொண்ட ஒரு செயலாகக்கூட இது இருக்கலாம். ஆனால், இந்த எழுத்துக்குப் பின்னால் இருந்த நேசம், இத்தனை ஆயிரம் வருடங்களுக்குப் பின்பும் நம் இதயத்தை ஏதோ செய்கிறது. தமிழகத்தின் முதல் தங்கமகள் மட்டும் அல்ல, இந்தியாவின் முதல் தங்கமகளும் கோதைதான்.
மண்ணுக்குள் இருந்து சுயமாக உதித்தெழுந்தவர்களைப் பற்றி புராணங்களில் படித்திருக்கிறோம். இதுவும் ஒரு சுயமான உதித்தெழுதல் தான்; ஒரு வகையில் உயிர்த்தெழுதலும்கூட. எழுந்தவள் எழுப்பும் கேள்விகளும் எண்ணற்றவை.
2,100 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தைக் கண்டறிய பயன்படுத்திய தொழில்நுட்பம் என்ன? அதை அணிகலனாக மாற்ற என்னென்ன வடிவத்தைக் கையாண்டார்கள். கலைநுட்பமும் ரசவாதமும் கலந்து உருக்கொள்ளும் படைப்பின் ரகசியத்தை எவ்வாறு கண்டறிந்தார்கள்? எழுத்தை எங்கும் நிறைந்த ஒன்றாக எப்படி மாற்றினர்? கேள்விகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
பாதுகாப்பு வசதிகள் பெரிதாக இல்லாத காலம் அது. அந்தக் காலத்தில் வெளியூரில் இருந்து நகரத்துக்குள் வருகிறவர்களுக்கு, தங்களின் செல்வத்தை நகருக்கு வெளியே அடையாளத்துடன் புதைத்துவைத்துவிட்டு உள்ளே வரும் பழக்கம் இருந்துள்ளது. அத்தகைய பழக்கப்படி இந்தப் புதையல் வைக்கப்பட்டிருக்கலாம். 
அப்படியென்றால், நகரத்தைவிட்டு வெளியே கிராமங்களிலோ அல்லது சிறுநகரங்களிலோ இருந்தவர்களிடமே, இவ்வளவு தங்கம் புழங்குகிற அளவுக்கு பொருளாதாரச் செழிப்பு இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

பொற்கொல்லர்கள்
கிராமப்புறத்திலே இவ்வளவு வளமை இருந்திருக்கும்போது, தலைநகரமான மதுரையின் வளமை எப்படி இருந்திருக்கும்?  முதலில் ஞாபகம் வருவது அழகர்கோயில் கல்வெட்டு. அங்கே கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சமணப் பள்ளி அமைக்க, மதுரையைச் சேர்ந்த பொற்கொல்லன் ஆதன், தானம் அளித்துள்ளான் எனச் செய்தி உள்ளது. இது மதுரை பொற்கொல்லர்களின் உயர்வைக் காட்டுகிறது. சிலப்பதிகாரத்தின் கடைசிப் பகுதியில் 1,000 பொற்கொல்லர்களின் தலைகளைக் கொய்து, கண்ணகியைச் சாந்தப்படுத்தினான் பாண்டிய வேந்தன் எனச் சொல்லப்படுகிறது. இது ஒரு படைப்பாளியின் கற்பனையாக இருக்கலாம். ஆனால், பெரும் எண்ணிக்கையில் பொற்கொல்லர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் சாட்சி இது.
தூத்துக்குடி ஏ.பி.சி. மஹாலட்சுமி கல்லூரி மாணவர்கள் நடத்திய கள ஆய்வில், முக்காணி என்ற கிராமத்தில் இருக்கும் பொற்கொல்லர்கள் தங்களின் குலக்கதையைச் சொல்லும்போது, 'மதுரையில் பெரும் எண்ணிக்கையில் பொற்கொல்லர்கள் கொலைசெய்யப் பட்டபோது நாங்கள் உயிர் தப்பி இங்குவந்து சேர்ந்தவர்கள்’ எனக் கூறியதாக கூறப்படுகிறது
இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பொற்கொல்லர்கள் வாழ்வதற்கான தேவை இருந்த நகரமாக மதுரை இருந்துள்ளது. அப்படியென்றால், அவ்வளவு வேலைப்பாடுகள் செய்யத் தேவையான பொற்குவியல் இருந்துள்ளது என்பதை, யூகிப்பது கடினம் அல்ல.
ஒரு கல்வெட்டு ஆதாரம், ஓர் இலக்கிய ஆதாரம், ஒரு வாய்மொழி வரலாற்று ஆதாரம், என ஒவ்வொன்றாகச் சேர்த்துக்கொண்டிருந்தால், கை நிறையத் தங்கக்கட்டிகளோடு நம் முன்னால் வந்து நிற்கிறாள் கோதை. அவளின் கைகளில் இருக்கும் மண் கலயத்திலேயே இவ்வளவு தங்கம் என்றால், மாமதுரைக்குள் எவ்வளவோ? சங்க இலக்கிய அகநானூற்றுப் பாடல் ஒன்றில் பொருள் தேடி வட திசை சென்ற தலைவன் வரத் தாமதமாவதால் கோபமான தலைவி, 'பாடலிபுரத்தில் எடுத்து சோணை நதிக்கரையில் நந்த வம்சத்தினர் புதைத்துவைத்த புதையல் நம்மைவிட அதிக செல்வத்தைக்கொண்டது என நினைத்துத் தேடிக் கொண்டிருக்கிறானோ?’ எனக் கேட்கிறாள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோணை நதிக்கரை நந்த வம்சத்தினரின் புதையலுக்கு இலக்கியம் சான்று கூறுகிறது. வைகை நதிக்கரை கோதை வம்சத்தின் புதையலுக்கு நாமே சான்றாக இருக்கிறோம்.
சாம்ராஜ்ஜியங்களை ஆண்ட பேரரசர்களின் பெயர்கள்கூட கல் எழுத்துக்குள் பதுங்கியிருக்கும் நிலையில், சாமானியப் பெண்ணின் பெயர் ஒன்று, பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு இன்றும் மின்னுகிறது. அந்த மின்னும் ஒளியின் வழியாக சிரித்துக்கொண்டே கோதை சொல்லும் செய்தி இதுதான்.

வைகை நதிக்கரை சங்கத் தமிழை மட்டும் வளர்க்கவில்லை, தங்கத் தமிழையும் அதுதான் வளர்த்தது!
இங்கே ஆய்வாளர்களை புருவம் உயர்த்த வைத்தது இரண்டு. ஒன்று அது "கோதை" என்ற ஒரு பெண்ணின் பெயர். உலகில் பெண்ணை காலுக்கு கீழே போட்டு மிதித்த போது பெண்ணை பொக்கிஷமாக போற்றியவன் தமிழன். இரண்டாவது வியப்பு, உலகில் இதுவரை எழுத்து பதித்த தங்கக்கட்டிகளை கண்டெடுத்ததே இல்லை. நம் தமிழர்கள் எவ்வளவு செல்வச் செழிப்பாக வாழ்ந்திருப்பார்கள் என்பதைதான் இது விளக்குகிறது.

Source: https://www.dinamani.com/keezhadi-special/2019/oct/17/thenur-2600-year-old-tamil-inscription-with-ancient-gold-bars-3256167.html

No comments: