உங்களின் மேலான கருத்துக்களையும் ஐயங்களையும் கேள்விகளையும் கீழேயுள்ள மின்அஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். நன்றி.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com

Please contact the below E-Mail ID for your suggestions, questions, and doubts. Thank you.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com


Tuesday, October 01, 2013

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

‘‘தமிழில் படித்தாலும் சாதிக்க முடியும் என்பதற்கு அடையாளம் தான் நான்’’ என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.


தினத்தந்தி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் இலக்கிய பரிசளிப்பு விழாவில் ‘‘சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு’’ பெற்ற உலகப்புகழ் தமிழ் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:–
என்னுடைய ‘‘கையருகே நிலா’’ என்ற நூல் என்னுடைய கன்னி முயற்சி. கிட்டத்தட்ட 50 அல்லது 60 விருதுகள் எனக்கு விண்வெளி துறையில் நான் செய்ததற்காக அளித்தாலும், நேற்று தினத்தந்தியில் முதல் பக்கத்தில் எனக்கு விருது கிடைத்திருப்பது என்பதை எனது அப்பா பார்த்துவிட்டு, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை என்பதை கடந்து தமிழறிஞர் மயில்சாமி அண்ணாதுரை என்பதை பார்த்து முதல் முறையாக என்னை பாராட்டினார்.
இதுவரைக்கும் என்னை மற்றவர்கள் பாராட்டியிருக்கலாம். அப்பா பாராட்டியது தினத்தந்தியில் வெளிவந்த முதல் பக்க செய்தியை பார்த்தப்பின்தான் பாராட்டினார்.
நான் படித்தபோது தினத்தந்தி முதல் மாணவனுக்கு பரிசு தருவார்கள். இந்த பரிசு வாங்க வேண்டும் என்பதற்காக படித்தேன். வாங்க முடியவில்லை. அன்றைக்கு விட்ட பரிசை திரும்ப வாங்க வேண்டும் என்பதற்காக விண்ணப்பித்தேன். வாங்கி உள்ளேன்.
தமிழில் படித்தாலும் சாதிக்க முடியும் என்பதும், தமிழில் படித்தால் உன்னால் நிலவுக்கே போகமுடியும் என்பதையும் இன்றைய மாணவர்களுக்கு, இன்றைய சிறார்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற ஒரே கடப்பாட்டில் எழுதியது தான் கையருகே நிலா என்ற புத்தகம்.
எனக்கு காலையில் 7.30 மணிக்கு அலுவலகத்திலிருந்து டிரைவர் வருவார். அவர் படித்து வைத்திருந்த தினத்தந்தியில், அவருக்கு பிடித்த செய்தியை, நான் என்ன படிக்க வேண்டுமோ அதை மடித்து வைத்திருப்பார். அதை நான் எடுத்து படிப்பேன். அன்னைக்கு விட்ட பரிசு, இன்னைக்கு எப்படி வருகிறது என்று பாருங்கள்.
தமிழ் அடுத்த தலைமுறைக்கு போக வேண்டும். இன்றைய குழந்தைகள் தமிழ் படிக்க வேண்டும். தமிழை உணர வேண்டும். பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றால் இன்றைய பெற்றோர்கள் தனது குழந்தைகள் தமிழில் படித்தால் மேலே வரமுடியும் என்று நம்ப வேண்டும். அதற்காக தான் எனது பணி சந்திரயானை அதையும் தாண்டி செவ்வாய்க்கு போக கூடிய விண்கலத்தை அனுப்பும் திட்டம்.
400 கிலோ மீட்டர் செல்லும் செயற்கைகோளை செய்தோம். அதையும் தாண்டி 36 ஆயிரம் கிலோ மீட்டர் செல்லும் செயற்கை கோள் செய்தோம். சந்திரயான் 4 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலவை தொட்டது. அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் 4 லட்சம் மில்லியன் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள செவ்வாயை தொடப்போகிறது.
அந்த வகையில் அறிவியல் அடுத்த கட்டத்தை தாண்டுகிறது. தமிழும் போக வேண்டும். அப்படி செல்ல வேண்டுமானால் எடுத்துக்கொண்டு போக வேண்டியது நாம் தான். 400 கிலோ மீட்டர் தூரம் செல்லும் செயற்கைகோள் மற்றவர்கள் செய்தனர். நாமும் செய்ய முடியும் என்று கருதி செய்தோம். ஆனால் அதையும் தாண்டி மற்றவர்கள் செய்ய முடியாததை, நம்மால் செய்ய முடியும் என்பதை சந்திரயான் காண்பித்தது. செவ்வாய்க்கும் போகிறோம்.இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

No comments: