உங்களின் மேலான கருத்துக்களையும் ஐயங்களையும் கேள்விகளையும் கீழேயுள்ள மின்அஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். நன்றி.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com

Please contact the below E-Mail ID for your suggestions, questions, and doubts. Thank you.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com


Friday, October 18, 2013

அதிக சம்பளமும், ஆடம்பர பொருட்களும் மட்டுமே வாழ்க்கையில்லை

தரமணியில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்த கேரளத்தைச் சேர்ந்த பெண், மன அழுத்தம் காரணமாக 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை தரமணியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ரேஷ்மா (24), மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். புதன்கிழமை இரவு தான் பணியாற்றிய நிறுவனத்தின் 10-வது மாடியில் இருந்த கேன்டீனுக்கு சென்ற ரேஷ்மா, திடீரென அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தரமணி காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அதிக மன அழுத்தமே தற்கொலைக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, "ரேஷ்மா கேரளத்தைச் சேர்ந்தவர். ரேஷ்மா தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணம் இல்லை என்று உறுதியாக கூறினர். அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது, ரேஷ்மா எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில் அதிக வேலைப் பளுவால் தற்கொலை செய்கிறேன் என்று எழுதி இருந்தார்.
பெற்றோரிடம் செல்போனில் பேசும்போதும் அதிக வேலை இருக்கிறது என்று பலமுறை கூறியிருக்கிறார். எனவே, அதிக வேலையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால்தான் அவர் தற்கொலை செய்திருக்கிறார்' என்றனர்.
கடந்த 6 மாதங்களில் மட்டும் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பணி செய்பவர்களில் 27 பேர் தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஐ.டி. பணியால் ஏற்பட்ட அதிக மன அழுத்தத்தால் தற்கொலை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை தடுப்பிற்கான 'சிநேகா' என்ற தொண்டு நிறுவன அதிகாரி சங்கர் கூறும்போது, "அதிக சம்பளமும், ஆடம்பர பொருட்களும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை ஐ.டி. இளைஞர்கள் உணர வேண்டும். போராடும் குணமும், தன்னம்பிக்கையும் ஐ.டி. இளைஞர்கள் பலரிடம் இருப்பதில்லை.
கணினி விளையாட்டுகளை அதிகமாக விளையாடும் இளைஞர்கள் அதில் தோல்வி அடையும் நிலை வரும்போது சுவிட்ச் ஆப் செய்து விடுகின்றனர். ஆனால் வெளியில் வந்து சக மாணவர்களுடன் விளையாடும்போதுதான் தோல்வி, சகிப்புத் தன்மையை அவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
இதேப் போல ஐ.டி. வேலையில் இருப்பவர்கள் தொழிலை தாண்டி மனம் விட்டு பேசும் வகையில் நல்ல நண்பர்களையும், உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்வது நல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் 044-24640050 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் பேசலாம். இது முற்றிலும் இலவச சேவை. பேசுபவரின் பெயர் விவரங்களைக் கூட தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார். 
இ.டி. நிறுவனங்களில் நமது இளைஞர்கள் பெருமளவில் பணிபுரிந்து வருகிறார்கள் . நம் நாட்டு பண்பாடு கலாசாரம் ஆகியவற்றை புறம் தள்ளி, பொட்டு வைப்பதும் இல்லை, தலைமுடியை விரிந்த கோலத்தில் வைத்திருப்பதும் அயல் நாட்டு மோகமும் வரண்முறையில்லாத பணி நேரமும் நம் நாட்டு இளைஞர்களை சீரழித்துள்ளது என்பதும் உண்மை.எட்டுமணி நேரம் என்பதும் விடுமுறை என்பதும் நம் நாட்டு தொழிலாளர் நல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும் இருப்பதில்லை .அதனை கண்காணிக்கும் அமைப்பும் சரியாக செயல்படுவதில்லை.அதிலும் குறிப்பாக பெண் பணியாளர்களின் நிலை மிக மிக மோசம்.பெண்களுக்கு பேறுகால விடுப்பு ஆறு மாதங்கள் வழங்காமல் இருப்பதையும் பிரசவத்திற்கு முன்பாக பணிவிலக கட்டாயபடுத்தும் நிலைதான் உள்ளது.சரியான நேரத்தில் உணவு உண்ணும் வழக்கமும் உறக்கமும் இல்லாததால் நமது இளைஞர்களின் எதிர்காலம் சூன்யமாக மாறுகிறது என்பதை உணர்ந்து இ.டி. நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும் .பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை .அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதும் தற்கொலை செய்துகொள்வதும் தடுக்கப்படவேண்டும்.தடுக்கப்பட்டே ஆக வேண்டும்

No comments: